பெரியாரின் கட்டளைகள்

Posted in Uncategorized on ஓகஸ்ட் 3, 2010 by pakuththarivu

1. .தொண்டர்களுக்குத் தனிப்பட்ட யாரிடமோ அல்லது தனிப்பட்ட எந்த வகுப்பிடமோ சிறிதும் கோபம், வெறுப்பு, துவேஷம் கூடாது

2. கடின வார்த்தை, கேவல வார்த்தை, மன வருத்தம் அல்லது ஆத்திரமூட்டும் வார்த்தை கண்டிப்பாய்   பிரயோகிக்கக் கூடாது.

3. போலீஸ்காரரிடம் நமக்குச் சிறிதும் வெறுப்பு, கோபம், விரோத உணர்ச்சி இருக்கக் கூடாது.

4. போலீஸ்காரர் முன் வந்ததும் அவரைப் பார்த்து புன்சிரிப்பு காட்ட வேண்டும்.

5. கூப்பிட்டால், கைது செய்ததாய்ச் சொன்னால் உடனே கீழ்ப்படிய வேண்டும்.

6. போலீஸ்காரர் அடித்தால் மகிழ்ச்சியோடு, சிரித்த முகத்துடன் அடி வாங்க வேண்டும்.  நன்றாய் அடிப்பதற்கு வசதி கொடுக்க வேண்டும்.

7. போலீஸ்காரர் பக்கத்தில் வந்தவுடன் நீங்கள் மெய்மறந்து பக்தியில் இருப்பது போல், ஒரு மகத்தான     காரியத்தை நாம் சாதிப்பதற்கு இந்த அற்ப அதாவது நம் சரீரத்துக்கு மாத்திரம் சிறிது தொந்தரவு, வலி    கொடுக்கக்கூடிய காரியத்தை ஏற்கும் வாய்ப்பு [பாக்கியம்] நமக்குக் கிடைத்திருக்கிறது என்று வரவேற்கும்   தன்மையில் இருக்க வேண்டும்.

8. போலீஸ்காரர் அடிக்கும் போது தடுக்கும் உண்ர்ச்சியோ, தடியை மறிக்கும் உணர்ச்சியோ கண்டிப்பாக இருக்கக்கூடாது.

9. அப்படிப்பட்ட தொண்டர், சர்வாதிகாரியாக இருந்தாலும் அவர்கள் அருள் கூர்ந்து கிட்டவே வரக்கூடாது.

10. ஒலி ஒலிப்பதில் அசிங்கமான வார்த்தைகள், தனிப்பட்ட மனிதர்களைக் குறிக்கும் வார்த்தைகள்    கண்டிப்பாய் உச்சரிக்கக் கூடாது.

11. எந்தக் காரியத்தின் மூலமும் தொண்டர்கள், நடத்துபவர்கள், தலைவர்கள் பலாத்கார உணர்ச்சி, பலாத்கார பயன் உள்ள எண்ணங்கள், செய்கைகள் கொள்ளக்கூடாது.

12. போலீஸார் சுடுவார்களானால் பொது ஜனங்கள் ஒடலாம், ஆனால் தொண்டர்கள் மார்பைக் காட்டியே ஆக வேண்டும்.

13. இந்தி எதிர்ப்பு இயக்கம், காரியாலயம், நிர்வாகம், நிர்வாகஸ்தர்கள் ஆகியவர்களுக்குத் தொண்டர்கள் அடிமை போல் க்ட்டுப்பட்டாக வேண்டும்.

14. பெண்கள் இடமும், மற்றும் இயக்கத்தில் உள்ளவர்களிடமும், வெளியே உள்ளவர்களிடமும் அன்பாய், மிகமிக யோக்கியமாய் நடந்து கொள்ள வேண்டும்.

   இப்படிப் பட்ட பல காரியங்களில் மிகுதியும் கண்டிப்பாய் கட்டுப்பட்டு நடக்க வேண்டியது அவசியமாகும்

                                                                                                        —–தந்தை பெரியார்

காட்டுமிராண்டித் தன்மை

Posted in Uncategorized with tags , , , on ஜனவரி 23, 2009 by pakuththarivu

ஒரு மனிதனை, அல்லது ஒரு சமுதாயத்தை, ஒரு நாட்டாரை, ஒரு மதத்தாரைக் காட்டுமிராண்டித் தன்மையுள்ளவர்கள் என்று சொல்லுவதற்குக் காரணங்களான குறிப்புகள் என்னவென்றால்:-

1.கைரேகை பார்த்தல்.

2.சோசியம் பார்த்தல்.

3.பிறந்த நேரம் கொண்டு சாதகப் பொருத்தம் பார்த்தல்.

4.சகுனம் பார்த்தல், அதற்குப் பலன் கணித்தல்.

5.நல்ல நேரம், நல்ல நாள், நல்ல கிழமை, நல்ல மாதம் என்பவைகளைப் பார்த்தல்.

6.ஆருடம் பார்த்தல், அதை நம்புதல்.

7.பட்சி சாத்திரம் பார்த்தல்.

8.ராகு காலம், குளிகை காலம், எம கண்டம் முதலியன பார்த்தல்.

9.நல்ல நட்சத்திரம், கெட்ட நட்சத்திரம், நல்ல லக்னம், கெட்ட லக்னம், கெட்ட லக்னம் பார்த்தல்.

10.கழுதை கத்துதல் பலன் பார்த்தல், ஆந்தை அலறுதல் பலன் பார்த்தல்.

11.பல்லி கத்துவது குறித்துப் பலன் பார்த்தல்

12.பாம்பு குறுக்கே போவது பற்றிப் பலன் பார்த்தல்.

13.காக்காய் கத்துதலுக்குப் பலன் கூறுதல்.

14.பூனை குறுக்கே போவதற்குப் பலன் கூறுதல்.

15.ஒத்தைப் பார்ப்பான் தென்படுதல்.

16.முண்டை பார்ப்பாத்தி (விதவை) வருதல்.

17.நெருப்பு எதிரில் வருதல்.

18.மனிதன் தும்முவதன் (தும்மல்) பலன்.

19.விளக்கு அணைதல், அதற்குக் கெட்ட பலன் கூறுதல்.

20.கண் திருட்டி படுதல், திருட்டி கழித்தல்.

21.சாந்தி கழித்தல்.

22.பாடம் போடுதல் (நோய் தீருவதற்காக).

23.மந்திரம் செபித்தல்.

24.தழைகளைக் கொண்டு (வேப்பிலை) பாடம் போடுதல்.

25.சாமி ஆடுதல்.

26.வாக்குக் கேட்டல் (பூசாரியிடம்).

27.பேய் ஆடுதல் (இதில் நம்பிக்கை வைத்தல்)

28.பேய் ஓட்டுதல்.

29.வலம் சுற்றுதல், இடம் சுற்றுதல் (பிரதட்சணம்-அப்பிரதட்சணம்).

30.வலது கால், இடது கால், வலது கை, இடது கை, உயர்வு தாழ்வு கற்பித்தல்.

31.எண்களில் நல்ல எண்கள், கெட்ட எண்கள் எனக் கருதுதல் ( 3, 13, 8, 18 இவை கெட்ட எண்கள் என்பது ).

32.அதிசயங்கள் செய்வது, அற்புதங்கள் செய்து காட்டுவது பற்றிய நம்பிக்கைகள்.

33.ஆசீர்வாதம் செய்தல், வாழ்த்துக் கூறுதல் நம்பிக்கை கொள்ளுதல், வசவு (வைதலில்) சாபம் கொடுத்தல் ஆகியவைகளில் நம்பிக்கை வைத்தல்.

34.பிராத்தனை செய்துவிட்டு, தொழுதுவிட்டு வந்தவர்களைக் குழந்தைகளின் தலையில் வாயினால் ஊதச் சொல்லுவதில் குழந்தைக்கு நோய் சவுகரியமாகும் என்ற நம்பிக்கை.

35.அகால் – இயற்கைக்கு மாறான வகையில் செத்துப்போனவர்கள், பிசாசாகப் பிறந்து வந்து தொல்லை கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை.

36.தூங்கி எழுந்தவுடன் பார்க்கத் தகுந்த வஸ்துக்கள், சிலர் முகத்தில் விழிப்பதால் கெடுதி ஏற்படுதல் என்ற நம்பிக்கை.

37.அமாவாசை, சனிக்கிழமை முதலிய நாட்களில் கறிதின்னுவதில்லை என்ற நம்பிக்கை.

—தந்தை பெரியார்.

மனிதன்-மிருகம் வேறுபாடு

Posted in Uncategorized with tags , , , on ஜனவரி 11, 2009 by pakuththarivu

மனிதன் விலங்குகளிலிருந்து எந்த அளவு வேறுபட்டுக் காணப்படுகிறான்:
மனிதன் என்றால் மிருகங்களை – பறவைகளைவிட அறிவு அதிகம் பெற்றவன்; சுற்றுச் சார்புக்கு ஏற்றவாறு தனது அறிவின் காரணமாக மாற்றி யமைத்துக் கொண்டு வாழ்பவன் என்றுதானே பொருள்? ஆனால் இன்று நடப்பதென்ன? ஒருவனை யருவன் வஞ்சிக்கின்றான் திருடுகின்றான்; கொலை செய்கின்றான் என்றால் மனிதனுக்கும் மற்ற மிருகங்களுக்கும் என்ன மாறுபாடு இருக்கின்றது?

-பெரியார்

சாவது இயல்பு:

Posted in Uncategorized with tags , , on ஜனவரி 10, 2009 by pakuththarivu

மனிதன் – பிறந்தவன் சாவ தென்பது இயற்கை. பிறக்கிறவன் எவனும் நிலைத்து வாழ்வது இல்லை. கடைசியில் செத்தே தீருவான். உலகத்தில் தோன்றும் எந்தப் பொருளும் மறைந்தே போகும். உலகத்தின் அடிப்படையே தோற்றமும் மறைவு மாகும். சாவது இயற்கை. இருப்பதுதான் அதிசயம்! சாவதால் ஏன் துயரப்படுகிறோம்? சாகிறவன் இருந்தால் ஏற்படுகிற இன்ப துன்பங்களைக் கணக்குப் போட்டுத்தான் விசனப்படுகிறோம். அதாவது வியாபார முறையில் கணக்குப் போடுகிறோம்.
-தந்தை பெரியார்.

மனிதச்சீவன் உயர்ந்ததா?

Posted in Uncategorized with tags , on ஜனவரி 9, 2009 by pakuththarivu

சாதியின் பெயரால் உயர்வு தாழ்வு.
மதத்தின் பெயரால் வேற்றுமை உணர்ச்சி.
தேசத்தின் பெயரால் குரோதத்தன்மை… முதலான இழி குணங்களை மனிதனிடமே அதிகமாக காண்கிறோம்.
மற்றும் கடவுளின் பெயரால் மேல் கீழ் நிலை முதலாகிய அயோக்கியத் தன்மைகள் மனிதச் சீவனிடமே உண்டு. ப்குத்தறிவின் காரணமாக மனிதச் சீவன் உயர்ந்தது என்று சொல்ல வேண்டுமானால் மேற்கண்ட கெட்ட தீய இழிவான அயோகியத்தனமான குணங்கள் என்பவைகள் எல்லாம் மனிதனிடம் இல்லாமல் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் மற்ற பகுத்தறி வில்லாச் சீவராசிகளை விட மனிதச் சீவன் மூளை விசேடம் முதலிய அவயவத்தை நன்மைக்காகப் பிரயோகித்துக் கொண்ட சீவன் என்று சொல்லப்படும். அதில்லாத நிலையில், எவ்விதத்திலும் மனிதச் சீவன் மற்றபிராணிகளை விட உயர்ந்த தல்ல என்பதோடு பல விதத்தில் தாழ்ந்தது என்றும் சொல்ல வேண்டியிருக்கிறது.

-தந்தைபெரியார்

நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்:

Posted in Uncategorized with tags on ஜனவரி 6, 2009 by pakuththarivu

மனிதனுக்கு மனிதன் தொடக்கூடாது, கண்ணில் படக்கூடாது தெருவில் நடக்ககூடாது; கோயிலுக்குள் போகக்கூடாது; குளத்தில் தண்ணீர் எடுக்கக்கூடாது என்கின்றவை போன்ற கொள்கை தாண்டவமாடும் ஒரு நாட்டைப் பூகம்பத்தால் அழிக்காமலோ, எரிமலையின் நெருப்புக்குழம்பால் எரிக்காமலோ, சமுத்திரம் பொங்கி மூழ்கச் செய்யாமலோ, பூமிப் பிளவில் அமிழச்செய்யாமலோ, சண்டமாருதத்தால் துகளாக்காமலோ விட்டிருப் பதைப் பார்த்த பிறகும் கூட கடவுள் ஒருவர் இருக்கிறார் என்றும் அவர் நீதிமான் என்றும் சர்வதயாபரர் என்றும் யாராவது சொல்லவந்தால், அவர்களை என்னவென்று நினைப்பது என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.

—தந்தைபெரியார்.

பொதுத்தொண்டு

Posted in Uncategorized with tags , on ஜனவரி 5, 2009 by pakuththarivu

பிறப்பதும் சாவதும் இயற்கை. ஆனால் மக்கள் பாராட்டுதலுக்கு உகந்த வகையில் வாழ்தல் வேண்டும். மக்கள் ஒருவரைச் சும்மா போற்ற மாட்டார்கள். நாம் மற்ற மக்களும் போற்றும்படியான வகையில் காரியம் ஆற்ற வேண்டும்.

பெரியார் 21.1.62

நமது பணி

Posted in Uncategorized with tags , , on ஜனவரி 3, 2009 by pakuththarivu

“மனித சமூகத்தில் பிறவியில் உயர்வு, தாழ்வு, ஆண்டான் – அடிமைத்தன்மை ஒழிந்து ஆணும் பெண்ணும் சகல துறைகளிலும் சமசுதந்திரத்துடன் வாழ வேண்டுமென்று நாங்கள் சொன்னால், தீண்டாமையும் சாதிபேதமும் ஒழிந்தால் தமது உயர்வும், தம் பிழைப்பும் கெடுமென்று எண்ணிப் பாடுபடாது வாழும் பார்ப்பனர்கள் மதம், சாஸ்திரம், புராணம் ஆகியவைகளைக் கொண்டு வந்து குறுக்கே போட்டு எங்களைத் தடைப்படுத்தும் பொழுது, அவை எவை யாயினும் மனித சமூக ஒற்றுமைக்கும், சமத்துவத்திற்கும், சுதந்திர வாழ்வுக்கும் கேடு செய்வதாக இருந்தால் அவற்றைக் கொளுத்தி ஒழிக்க வேண்டுமெனக் கூறுகிறேன்”.

—–தந்தை பெரியார்.

நான் எப்படி?

Posted in Uncategorized with tags , , on ஜனவரி 2, 2009 by pakuththarivu

நான் ஒரு சுதந்திர மனிதன்; எனக்குச் சுதந்திர நினைப்பு, சுதந்திர அனுபவம், சுதந்திர உணர்ச்சி உண்டு. அதை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். நீங்கள் என்னைப் போலவே உங்களது சுதந்திர நினைப்பு, அனுபவம் உணர்ச்சி ஆகியவைக்ளால் பரிசீலனை செய்து, ஒப்பக் கூடியவைகளை ஒப்பி, தள்ளக் கூடியவைகளை தள்ளி விடுங்கள் என்கிற நிபந்தனையின் பேரிலேதான் எதையும் தெரிவிக்கிறேன். எப்படிப்பட்ட பழமை விரும்பிகளானாலும் இதற்கு இடம் கொடுக்கவில்லையானால் அது நியாயமும் ஒழுங்குமாகாது.

—-தந்தை பெரியார்.

ஒழுக்கம்

Posted in Uncategorized with tags , on ஜனவரி 2, 2009 by pakuththarivu

பொதுவாழ்வின் பெயரால் ஒழுக்கக் கோடாக, லஞ்சகராக, திருடர்களாக நடப்பவர்களை ஒருநாளும் விட்டுவைக்கக் கூடாது. ஒரு நாடு சுபிட்சத்துடன் வாழவேண்டுமானால் அந்நாட்டு மக்கள் ஒழுக்கமுள்ளவர்களாக இருத்தல் அவசியம். மனிதனிடம் சுலபத்தில் ஒழுக்கத்தைப் புகுத்த வேண்டுமானால், மாணவப் பருவத்தில்தான் முடியும். பிறருக்கு எந்தவிதத் தொல்லையும் தராத வாழ்வே ஒழுக்கம். இது எல்லாவித பேத நிலையும் ஒழித்த நிலையில்தான் வளர முடியும். ஒழுக்க அடிப்படையே இன்ப வாழ்வு. ஒழுக்கம் என்பது தனக்கும் அந்நியனுக்கும் துன்பம் தராமல் நடந்து கொள்ளுவதாகும்.

தந்தைபெரியார்